விஜய் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.. பத்திரிகையாளர்கள் மீது பிரேமல்தா கோபம்..!

Mahendran

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (14:15 IST)
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய செய்தியாளர்களிடம், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோபமடைந்தார். மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை விட்டுவிட்டு, இதுபோன்ற தேவையற்ற கேள்விகளை ஏன் கேட்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் வாக்கு முறைகேடுகள் குறித்து தனது கண்டனங்களை தெரிவித்தார்.
 
அப்போது, செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் நடிகர் விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சி குறித்து கேள்விகள் கேட்க தொடங்கினர். இதனால் எரிச்சலடைந்த பிரேமலதா, “நான் பத்திரிகையாளர்களை தினமும் சந்திக்கிறேன். ஆனால், நீங்கள் எப்போதுமே இரண்டு விஷயங்களை பற்றித்தான் கேட்கிறீர்கள், ஒன்று கூட்டணி, மற்றொன்று நடிகர் விஜய். இதைத் தவிர வேறு கேள்விகள் இல்லையா?” என்று நேரடியாகக் கேட்டார்.
 
மேலும், “நீங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். தூத்துக்குடி மக்களின் பிரச்சினைகள் குறித்து ஏன் கவனம் செலுத்துவதில்லை? உப்பள தொழிலாளர்களின் துயரங்கள், சிறு, குறு தொழில்களின் நிலை, துறைமுக விரிவாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என எத்தனையோ பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. அரசியல் என்பது மக்களுக்காகத்தான். ஆட்சி என்பதும் மக்களுக்காகத்தான்” என்று ஆவேசமாகப் பேசினார்.
 
இந்தக் கேள்விகளுக்குப் பிறகு, பத்திரிகையாளர்களுடனான உரையாடலை முடித்துக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், அங்கிருந்து உடனடியாக கிளம்பி சென்றார். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்