மதுரை தவெக மாநாட்டில் தள்ளி விடப்பட்டது குறித்து விஜய் ரசிகர் ஒருவர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவர் உண்மையாக அந்த மாநாட்டுக்கு வந்தவர் இல்லை என தவெகவினர் வீடியோ, புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மதுரையில் நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யை பார்ப்பதற்காக மதுரையில் குவிந்தனர். அப்போது தவெக தலைவர் விஜய் ராம்ப் வாக்கில் வரும்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ஓடி வந்தபோது பவுன்சர் ஒருவர், அந்த ரசிகரை பிடித்து ராம்ப் வாக் மேடையிலிருந்து கீழே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், வீடியோவும் வைரலானது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவர் சமீபத்தில் தனது தாயாருடன் சென்று மதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது தள்ளிவிடப்பட்ட தொண்டர் நான் தான் என்றும், இதற்காக விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் அளித்தார்.
ஆனால் அவர் அந்த தள்ளிவிடப்பட்ட நபர் அல்ல என்று தவெகவினர் கூறி வந்த நிலையில் சமீபத்தில் மற்றொரு இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த கூட்டத்தில் தள்ளிவிடப்பட்டது நான் தான், எனக்கு எதுவும் ஆகவில்லை, விஜய் குறித்து தவறான தகவல்களை பரப்ப இப்படி செய்கிறார்கள் என பேசியிருந்தார்.
இதனால் யார் உண்மையாக அந்த கூட்டத்தில் தள்ளிவிடப்பட்டவர் என்ற கேள்வி எழுந்த நிலையில், இரண்டாவதாக பேசிய நபர் தவெக கூட்டத்தில் உள்ள புகைப்படங்களை தவெகவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் விஜய் மீது புகாரளித்த சரத்குமார் அப்படி எந்த புகைப்படத்தையும் காட்டவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள தவெகவினர் வேண்டுமென்றே யாரோ விஜய் மீது களங்கம் ஏற்படுத்த போலியான புகாரை அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.
Edit by Prasanth.K