சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. அந்த சர்ச்சைகள் இன்னமும் முடியாமல் மர்மமாகவே தொடர்கிறது.
இந்நிலையில் பெண் ஒருவருக்கு அப்பல்லோ நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கீதா என்ற பெண் வழக்கறிஞர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 6 மாதத்திற்கு முன்னர் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் ஹீமோ என்ற மருந்தினை கை நரம்பின் வழியாக செலுத்துவதற்கு பதிலாக கை சதையின் வழியாக செலுத்தியுள்ளனர்.
இதனால் அவரது கை அழுகும் நிலைக்கு சென்றதை அடுத்து அவர் மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின்னரும் கீதாவால் தனது கையை அசைக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவரை கைவிட்டுவிட்டது.
மார்பக புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட கீதாவுக்கு அதுவும் சரியாகாமல் இந்த சிகிச்சையால் அது மேலும் தீவிரமடையும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை.