ஆவின் நிறுவனத்தின் நோக்கம் தமிழக மக்கள் நலனில் மட்டுமே இருக்க வேண்டும்: அன்புமணி ராம்தாஸ்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:05 IST)
ஆவின் நெய், வெண்ணெய் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த் அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் ஆவின் நெய் விலை அனைத்து அளவுகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் நெய்  75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும்,  200 கிராம் 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும், 500 கிராம் 315 ரூபாயிலிருந்து 365 ரூபாயாகவும், ஒரு கிலோ நெய் விலை 630 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ நெய் விலை ரூ.70 முதல் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், வெண்ணெய் விலை அரை கிலோ 265 ரூபாயிலிருந்து ரூ.280 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது வெண்ணெய் விலை கிலோவுக்கு  ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.
 
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்த்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான்காவது முறையாகும். 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு,  ரூ.700 ஆகியுள்ளது.  இது 36% உயர்வு ஆகும். மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருளின் விலையை ஒன்றரை ஆண்டுகளில் 36% உயர்த்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட  குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.
 
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் சந்தையில் வலிமையாக இருந்தால் தான்,   தனியார் நிறுவனங்களின் பால் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆவின் நிறுவனம் பால் விலையை மறைமுகமாகவும்,  பால் பொருட்கள் விலைகளை நேரடியாகவும்  உயர்த்தி வருவதன் மூலம்  வாடிக்கையாளர்களை இழந்து விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. குஜராத் மாநிலத்தின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல்  ஒரு கிலோ நெய்யை ரூ.650க்கும் , கர்நாடக அரசின் பொதுத்துறை நிறுவனமான நந்தினி ஒரு கிலோ நெய்யை ரூ.610க்கும் விற்பனை செய்கின்றன. இதனால் ஆவின் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனங்களுக்கு மாறிவிடும் வாய்ப்புகள் உள்ளன. அது ஆவினுக்கு  பாதிப்பாக  அமையும்.
 
தமிழ்நாட்டு மக்கள் நலன் ஒன்று தான் ஆவின் நிறுவனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.  அதற்காக பிற நிறுவனங்களுடன் போட்டி போட்டு  குறைந்த விலையில் பால் பொருட்களை வழங்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக  ஆவின் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வை ஆவின் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்