திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை பார்க்க முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நேற்று அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். கடந்த ஒரு வாரத்தில் கருணாநிதியை அழகிரி சந்திக்கும் இரண்டாவது சந்திப்பு இது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இத்தனை நாள் ஒதுங்கி இருந்த அழகிரி ஒரே வாரத்தில் கருணாநிதியை இரண்டு முறை சந்தித்திருப்பது திமுகவினரிடையே ஒரு வித குழப்பத்தையும், அழகிரி ஆதரவாளர்களிடம் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கருணாநிதியை சந்தித்த அழகிரி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்தும், தென் மாவட்டங்களில் கட்சியின் நிலை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது கருணாநிதியின் மகள் செல்வி உடனிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு நடந்து முடிந்து அழகிரி திரும்பும் போது அங்கு விரைந்துள்ளார் கனிமொழி. கனிமொழியிடமும் அழகிரி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுள்ளார். அழகிரி வந்த சென்ற செய்தி அறிந்ததும் ஸ்டாலினும் உடனடியாக கோபாலபுரத்துக்கு விரைந்ததாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் இரண்டு முறை அழகிரி வந்தது ஸ்டாலின் வட்டாரத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.