தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Mahendran

வியாழன், 24 ஜூலை 2025 (15:34 IST)
தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல் நடப்பதாகவும், இதில் ஆளுங்கட்சியான தி.மு.க.வினருக்கு தொடர்பு இருப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சில மருத்துவமனைகள், குறிப்பாக பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள சில மருத்துவமனைகளில் சட்டவிரோத சிறுநீரக வர்த்தகம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த மருத்துவமனைகள் தி.மு.க.வை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தனது குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் பேசிய பழனிசாமி, "தி.மு.க. அரசே தனது அறிக்கையில், தி.மு.க.வினருக்கு சொந்தமான மருத்துவமனைகளில் சிறுநீரகக் கடத்தல் நடைபெறுவதாகக் கூறுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் களத்தில் தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யம், "ஏழை மக்களிடமிருந்து சிறுநீரகங்களை திருடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சுகாதார அமைச்சகம் உரிய விசாரணையைத் தவிர்க்க அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி வருவதால், குற்றவாளி இன்னும் தலைமறைவாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி விசாரணையை தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் அ.தி.மு.க. முன்வைத்துள்ளது.
 
ஏற்கனவே, சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிறுநீரகக் கடத்தல் நடைபெற்று வருகிறது என்று பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தற்போது அதே குற்றச்சாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்