அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் மனித உயிரை காப்பது இது முதல் முறையல்ல. மும்பையை சேர்ந்த க்ஷிதிஜ் ஜோடேப் என்ற 26 வயது மென்பொருள் பொறியாளரின் உயிரை, அவரது Apple Watch Ultra சாதனம் ஆழ்கடலில் காப்பாற்றியுள்ளது.
புதுச்சேரிக்கு அருகே ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுமார் 36 மீட்டர் ஆழத்தில் அவர் இறங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது பெல்ட் கழன்றுள்ளது. இதனால் அவரால் கீழே செல்ல முடியாமல், மாறாக கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக மேல்நோக்கி உந்தப்பட்டார்.
அதிக ஆழத்தில் இருந்து மிக வேகமாக மேலே வருவது, நுரையீரலின் அதிகப்படியான விரிவாக்கத்தை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இந்த ஆபத்தை உணர்ந்த அவர், உதவிக்கு அழைக்க முடியாத நிலையில் இருந்தார்.
சரியாக இந்தச் சமயத்தில்தான், அவரது Apple Watch Ultra-வின் ஆழத்தை அளவிடும் அம்சம், ஆபத்தை உணர்ந்தது. உடனடியாக, அது அவருக்கு அவசர எச்சரிக்கையை அனுப்பியது. அந்த எச்சரிக்கையை அவரால் கட்டுப்படுத்த முடியாததால், அடுத்த நொடியே வாட்ச் அதன் சைரனை முழு ஒலியில் ஒலிக்க தொடங்கியது.
நீருக்கு அடியில் 180 மீட்டர் தூரம் வரை கேட்கக்கூடிய இந்த சைரன் ஒலியைக் கேட்ட அவரது பயிற்சியாளர் உடனடியாக அவருக்கு உதவினார். சைரன் அலாரம் இல்லையென்றால், க்ஷிதிஜின் உயிர் போயிருக்க கூடும். இந்த அனுபவத்தை தொடர்ந்து, க்ஷிதிஜ் Apple தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார். அதற்கு டிம் குக்கும் பதிலளித்து, க்ஷிதிஜ் நலமாக இருக்க வாழ்த்தியுள்ளார்.