உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் நடக்கிறது என்றும், மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படுவதில்லை" என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "திமுக தேர்தல் பிரச்சாரத்தை அரசு செலவில் செய்து வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் மக்கள் பணம் வீணாகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை 45 நாட்களில் செய்வதாகக் கூறுகின்றனர்" என்று விமர்சித்த தமிழிசை, "இந்தத் திட்டத்திலும் ஊழல் உள்ளது" என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார். "சான்றிதழ் வழங்க அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை அறிய முடிகிறது என்றும், மனு அளிக்க வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யப்படுவதில்லை" என்றும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பாஜக-அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெளிவுபடுத்தினார். சீமான் மற்றும் விஜய் ஆகியோரை எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைப்பதாக வந்த செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அது எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட நிலைப்பாடு" என்று கூறினார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள் என்றும், இப்போதைக்கு அந்த விவகாரம் தேவையில்லை என்றும் மற்றொரு கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தார் .