எடப்பாடியார் குறி புலிதான்.. அணில் இல்லை! குறி வெச்சா இரை விழணும்! - ஆர்.பி.உதயக்குமார்!

Prasanth K

வியாழன், 24 ஜூலை 2025 (10:56 IST)

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிராக ஓரணியாக நிற்க அதிமுக விடுத்த அழைப்பை நாதக, தவெக மறுத்தது குறித்து ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் தேர்தல் சுற்றுப்பயணங்கள் தீவிரமடைந்து வருகிறது. அவ்வாறாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து நீக்க தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று அவர் விடுத்த அழைப்பை அந்த கட்சிகள் நிராகரித்தன.

இதுகுறித்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் “திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமுமே கூட அதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளுக்கான ஆதரவு தமிழ்நாட்டில் 20 சதவீதம் இருக்கிறது என்றால், திமுக மீதான அதிருப்தி 80 சதவீதம் இருக்கிறது. இந்நிலையில் திமுகவை அகற்ற 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். ஆனால் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் ஓரணியாக நில்லாத பட்சத்தில் இந்த 80 சதவீதம் என்பது பலவாறாக பிரிந்து பலனளிக்காமல் போய்விடும்” என பேசியுள்ளார்

 

மேலும் பாஜகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர் “தமிழ்நாட்டில் திமுகவால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கை மோசமடைந்துள்ளது. இவற்றை சரிப்படுத்த அனுபவமுள்ள தலைவரான  எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து வியூகங்களையும் வகுத்து வருகிறார். அவர் ஒரு வேட்டைக்காரர். அவர் குறி வைத்தால் இரை விழும். புலிவேட்டைக்கு போய்க் கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவே அணில்களின் சத்தங்களையும், குயில் பாட்டையும் நின்று பார்க்க நேரமில்லை” என்று பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்