கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனோரஞ்ஜிதம் நாகராஜன். இவருக்கு எதிராக அந்த தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பொங்கல் அன்று நடைபெற்ற பொங்கல் விழாவின் போது கலந்துகொண்ட எம்எல்ஏ மனோரஞ்ஜிதத்துக்கும் மாத்தூர் ஒன்றிய நிர்வாகி ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது அந்த நிர்வாகிக்கு மனோரஞ்ஜிதம் கன்னத்தில் பளார் சென்று அறைவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்திருந்தாலும் இரண்டாவது முறையாக ஊத்தங்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த அதிமுக நிர்வாகிக்கு பொங்கல் பரிசாக கன்னத்தில் பளார் என அறைவிட்ட ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி நன்றி என கூறப்பட்டுள்ளது. இது கட்சி தலைமைக்கு புகார் அனுப்பப்படும் என எம்எல்ஏ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.