என் கார்த்திக் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை - கதறும் நந்தினி

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:23 IST)
தனது கணவரின் உடலை கூட பார்க்க, அவரின் குடும்பத்தினர் விடவில்லை என நடிகை நந்தினி கூறியுள்ளார்.


 

 
விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
 
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் அவர் பண மோசடி செய்திருந்ததாகவும், தன்னிடம் கூட ரூ.20 லட்சம் வரை அவர் பண மோசடி செய்துள்ளார் எனவும் நந்தினி கூறியிருந்தார். மேலும், வேறு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக எனது கணவரை போலீசார் கைது செய்தனர். இது எனது குடும்பத்தினருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. எனவே, நான் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்”என கூறியுள்ளார். 
 
ஆனால், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கார்த்திக் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல், தனது மகனின் மரணத்திற்கு காரணமான நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோரை சும்மா விட மாட்டேன். அவர்களின் மீது போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என கார்த்திகேயனின் தாய் சாந்தி கூறியிருந்தார். மேலும், மரணமடைந்த தனது கணவர் கார்த்திக்கின் உடலை கூட இன்னும் நந்தினி வந்து பார்க்கவில்லை என சாந்தி கூறினார்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நந்தினி ‘கார்த்திக்கை உயிருக்கு உயிராய் காதலித்தேன். அவர் தற்கொலை செய்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி அவரை சந்தித்து பேசினேன். இருவரும் சினிமாவிற்கும் சென்றோம். அவரின் நினைவுகள் எனை வாட்டுகிறது. அவரது தற்கொலைக்கு எனது தந்தைதான் காரணம் என அவர் ஏன் எழுதி வைத்தார் என எனக்கு தெரியவில்லை. எனது கணவரின் முகத்தை கடைசியாக பார்க்க சென்றேன். ஆனால் அவரின் உறவினர்கள் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை.  பிரச்சனை வேண்டாம் என நண்பர்கள் கூறியதால் அங்கிருந்து சென்று விட்டேன். சேர்ந்து வாழ பலமுறை சந்தர்ப்பம் அளித்தேன். ஆனால், தற்போது எல்லாம் கைமீறிப் போய் விட்டது” எனக் கூறியுள்ளார்.
 
இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், நந்தினி, அவரது தந்தை ராஜேந்திரன், கார்த்திக்கின் உறவினர்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்