செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார், கமல் தனிக்கட்சி தொடங்க உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நடிகர் சிவாஜி தனிக்கட்சி தொடங்கி எம்எல்ஏ கூட ஆக முடியவில்லை என கூறினார். இதற்கு சிவாஜி சமூகநலப்பேரவை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் சிவாஜி கணேசன் தனிக்கட்சி தொடங்கி எம்எல்ஏ-ஆகக் கூட முடியவில்லை என்று உளறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.
இன்று நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம், ஜெயக்குமார் போன்ற பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியல் செய்ய நினைக்கும் சிலர் நடிகர் திலகம் சிவாஜி கட்சி ஆரம்பித்து தோற்றார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவாஜி எம்எல்ஏவாக ஆகாமல் கூட, அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் போற்றப்படுகிறார். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களால் போற்றப்படுவார்.
ஆனால், ஜெயக்குமார் போன்ற அனாமதேய அரசியல்வாதிகள் பதவி போனபின் அடையாளம் அழிந்து, இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்பதுதான் உண்மை. இனியாகிலும், நடிகர் திலகம் மீது இத்தகைய அவதூறு பிரசாரத்தை ஜெயக்குமார் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நடிகர் திலகத்தின் லட்சோபட்சம் ரசிகர்கள் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.