நடிகர் கமலுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்தை அடுத்து நடிகர் கமல் அவருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் அஜித் பெயரை வைத்து திமுகவையும் கமலையும் சீண்டியுள்ளது அதிமுக.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை காயத்ரி ரகுராம் விஷயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக கூறினார்.
இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து நடிகர் கமலை குறி வைத்து பேட்டியளித்து வருகின்றனர். அவரது விமர்சனத்துக்கு பதில் அளிக்காமல் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்துகின்றனர்.
இதனையடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அறிக்கை வெளியிட்டார். அதனையடுத்து நடிகர் கமலும் ஸ்டாலினின் ஆதரவுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் அஜித்தை இழுத்து விட்டுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். ஏற்கனவே இது தொடர்பாக பேசிய அவர் நடிகர் கமல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பேசிய அவர், நடிகர் அஜித்துக்கு இருக்கும் தைரியம் நடிகர் கமலுக்கு இல்லாமல் போனது ஏன். திமுக ஆட்சியில் நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என கருணாநிதி முன்னிலையில் அஜித் பேசும் போது கமல் எங்கு சென்றார் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்தால் அதற்கு முறையாக பதில் சொல்லுவோம் என்றார்.