ஆடித்திருவாதிரை திருவிழா! கங்கைக் கொண்ட சோழபுரத்தில் ‘கங்கை புத்திரன்’ பிரதமர் மோடி! - முழு பயணத் திட்டம்!

Prasanth K

வெள்ளி, 25 ஜூலை 2025 (10:29 IST)

சோழப்பேரரசன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரையை கொண்டாட பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

 

ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்து சோழ தேசத்தை ஆண்ட பேரரசர் ராஜேந்திரசோழனின் பிறந்தநாள் ஆடித்திருவாதிரை விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் வரும் 27ம் தேதி வரை கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை திருவிழாக் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

 

நாளை இரவு 8 மணியளவில் தூத்துகுடி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தடையும் அவர் அங்குள்ள அரசினர் விடுதியில் தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை கங்கைக்கொண்ட சோழபுரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

 

அங்கு நடக்கும் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. பின்னர் கங்கைக் கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு வாரணாசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. சாமி தரிசனம் செய்த பின்னர் அங்கு தியானம் செய்யும் பிரதமர் மோடி, அதன்பின்னர் அங்கு தொல்லியல் துறையின் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசிப்பதுடன், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

 

அதன் பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அவர் பின்னர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி செல்கிறா. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைகிறார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்