விண்வெளி நாயகா..! பூமி திரும்பிய சுபன்ஷூ சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து! கேக் வெட்டி கொண்டாட்டம்!

Prasanth K

செவ்வாய், 15 ஜூலை 2025 (16:36 IST)

இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா விண்வெளிக்கு சென்று பத்திரமாக பூமி திரும்பிய நிலையில் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் அடங்கிய குழு கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி ஃபால்கன் விண்கலம் மூலமாக விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர். அங்கு விண்வெளி ஆராய்ச்சி பணிகளை முடித்துக் கொண்டு நேற்று புறப்பட்ட அவர்கள் பத்திரமாக தற்போது பூமியை வந்தடைந்துள்ளனர்.

 

இதன்மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபன்ஷூ சுக்லா. சுபன்ஷூ சுக்லா பூமியை வந்தடைந்த நிலையில் அதை அவரது பெற்றோரும், உறவினர்களும் டிவியில் பார்த்து மகிழ்ந்ததுடன், கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

 

சுபன்ஷூ சுக்லாவின் இந்த பயணம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “விண்வெளிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை வரவேற்கும் நாட்டுடன் நானும் இணைகிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் ஒரு பில்லியன் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி விமானப் பயணமான ககன்யான் நோக்கில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது” என தெரிவித்துள்ளார். சுபன்ஷூ சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை தேசம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்