ஆதார் அட்டை இல்லாத மாணவர்களுக்கு பள்ளி மூலம் கொடுக்க நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

Mahendran
புதன், 13 மார்ச் 2024 (13:56 IST)
பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெற இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அஞ்சல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இ- சேவை மையம் செல்ல வேண்டிய நிலை இருந்த இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது”
 
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி மற்றும் ஊக்கத் தொகைகள், பயனாளர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு கட்டாயம் தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாகிறது. எனவே, அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் ஆதார் அட்டை வழங்குவது அவசியம்.
 
அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆதார் மையங்களை உருவாக்க வேண்டும்.
 
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி படங்கள் பிடிக்கப்படுவதில்லை. பெற்றோரின் ஆதார் விவரங்கள் மற்றும் கைரேகை அங்கீகாரத்துடன் குழந்தையின் முகம் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இந்த வகை ஆதார் பதிவுகளைத் தற்போது பள்ளிகளிலேயே செய்யலாம். இதற்கான வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
 
குழந்தைகள் 5 வயதை அடைந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்களை (முகம், கைரேகைகள் மற்றும் கருவிழிகள்) கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும். இந்த வகையில் பதிவு செய்வதை இனி பள்ளிகளிலேயே செய்யலாம்.
 
15 வயதுக்குப் பிறகு நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இப்பணிகளையும் பள்ளிகளில் மேற்கொள்ளலாம். அதேபோல, பிறந்தது முதல் பதிவு செய்யாத 7-15 வயது பிள்ளைகளுக்கான பதிவுகளையும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம்’ என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 
இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடம் (UIDAI) பதிவாளராக பதிவு பெற்றுள்ளார்.
 
மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள உதவி திட்ட அலுவலர் பொறுப்பு அதிகாரியாகச் செயல்படுவார். ஆதார் தரவு உள்ளீட்டாளர் பள்ளிக்கு செல்லும் முன்பு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் மூலம் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு தகவல் தெரிவிப்பார்.
 
வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனது வட்டாரத்தில் நடைபெறும் ஆதார் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைப்பார். பள்ளிகளில் ஆதார் எண் பெறப்பட்டதும் அதை ’எமிஸ்’ (EMIS - Educational Management Information System) தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வது இவரது பொறுப்பு.
 
வட்டார அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற திட்டம் வகுப்பது வட்டார கல்வி அலுவலரின் பணி. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆதார் பதிவு மேற்கொள்ளும் முகமையாக எல்காட் நிறுவனம் செயல்படும்.
 
பதிவுசெய்யும்போது பிறந்த தேதி பெயர், முகவரி, அலைபேசி எண் போன்றவற்றில் உள்ள திருத்தங்களையும் எவ்விதக் கட்டணமுமின்றி மேற்கொள்ளலாம்
 
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்