கருணாஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்: சட்டசபையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (10:15 IST)
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், கடந்த சில மாதங்களாகவே அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார். அந்த வகையில் இன்று அவர் சட்டசபையில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிராக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை அவர் கொண்டு வருகிறார்.  கருணாஸ் எம்.எல்.ஏ மட்டுமின்றி தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர்களும் இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்தும் ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வர அனமதிக்கக் கூடாது என்று மூன்று எம்.எல்.ஏக்களும் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானம், பாஜகவுக்கு எதிராக இருப்பதால் அதிமுக அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

முன்னதாக இந்தியாவில் ராமராஜ்ஜியம் உருவாக்குவோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற முழக்கத்தோடு விஸ்வ இந்து பரீஷத் மார்ச் 20ஆம் தேதி அன்று ரதயாத்திரை ஒன்றை கேரளாவிலிருந்து தொடங்கி தமிழகத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதி புளியரை வழியாக செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்