சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கடலில் அடித்து செல்லப்பட்ட எருமை மாடு ஒன்று கடந்த 6 நாட்களாக கடலில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அவ்வாறாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் தாழங்குடி முகத்துவாரம் அருகே சுமார் 35க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி அவை கடலுக்கு அடித்து செல்லப்பட்டன.
அவ்வாறு அடித்து செல்லப்பட்ட மாடுகள் பலவும் இறந்து கரை ஒதுங்கிய நிலையில் ஒரு எருமை மாடு மட்டும் உயிரோடு கடலில் தத்தளித்து வருகிறது. சுமார் 6 நாட்களாக 9 கடல் மைல் தூரத்தில் உயிர் வாழ போராடி வரும் அந்த எருமையை மீட்க பெரிய அளவிலான படகு இல்லாததால் அப்பகுதியில் செல்லும் தாழங்குடா பகுதி மீனவர்கள் எருமை மாட்டிற்கு குடிக்க தண்ணீர் மட்டும் கொடுத்து வருகின்றனர்.
6 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் அந்த எருமை மாடு மீட்கப்படுமா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இதற்காக அரசு ஏதேனும் முயற்சி எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K