மூக்கு சரியில்லை, முகம் சரியில்லை என கிண்டல் - 9ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (03:29 IST)
உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 9ஆம் வகுப்பு மாணவி நேற்று காலை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிறைப்பாறை கிராமத்தை சேர்ந்த சின்னன், சின்னம்மாள் தம்பதியின் 2ஆவது மகள் சுதர்ஷனா [14]. இவர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
 
நேற்று காலை 7:40 மணிக்கு தனக்கு உணவு வாங்கி வைத்திருக்குமாறு சக மாணவியரிடம் கூறி விட்டு தனது அறையில் இருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் சாப்பிட வராததால், அவரை தேடி மாணவியர் அறைக்குச் சென்றுள்ளனர்.
 
அப்போது மாணவி துாக்கில் தொங்கியுள்ளார். இது குறித்து விடுதி காப்பாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணவி இறந்திருந்தது தெரியவந்தது.
 
இது குறித்து டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் விநாயகம், தாசில்தார் ரவி ஆகியோர் பள்ளி விடுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
 
அப்போது தலைமையாசிரியருக்கு சுதர்ஷனா எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், "உனது மூக்கு சரியில்லை, முகம் சரியில்லை, சத்தமா பேசத் தெரியவில்லை என சக மாணவியர் கேலி பேசியதால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பெட்டியில் 550 ரூபாய் உள்ளது.
 
அதை எனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். மேலும், எனக்காக பள்ளியில் படிக்க கட்டிய பணத்தையும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
 
ஆனால் அவரது பெற்றோர்கள் போலிசிடம் அளித்துள்ள புகாரில், உடல், கழுத்து பகுதியில் காயம் உள்ளது. உடையிலும் ரத்தம் உள்ளது. அவரது சாவில் மர்மம் இருப்பதால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்