கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற 3 பேர் விஷவாயு தாக்கி பலியாகி உள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகர் மாவட்டத்தில் உள்ள கடம்ப்பூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் யாதவ்(45) என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்தது. வெளியே வர முடியாமல் கத்திய ஆட்டை காப்பாற்ற சுரேஷ் யாதவின் மருமகனான சிவம்(17) என்பவர் கிணற்றுக்குள் குதித்தார். வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால் பதற்றம் அடைந்த சுரேஷ் யாதவ் கிணற்றுக்குள் குதித்தார்.
கிணற்றுக்குள் அவர்கள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட சுரேஷ் யாதவின் தம்பி ராஜேஷ்(40) என்பவர் அவர்களை மீட்பதற்காக கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றுக்குள் குதித்த மூவரும் கிணற்றிலேயே மரணமடைந்தனர். பயன்பாடின்றி பாழ்பட்டுப் போய் கிடந்த அந்த கிணற்றுக்குள் இருந்து கிளம்பிய வீரியமான விஷவாயுவை சுவாசித்ததால் தான் அவர்கள் மூவர் இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது.