தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் மற்றும் இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வருங்காலத்தில் புதிய இடங்களில் கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதி வழங்க கூடாது என்றும், வருவாய் துறை இதனை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பட்டா இடங்களில் கொடிக்கம்பங்களை அமைப்பது தொடர்பாக அரசு உரிய விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சிகள் உள்ளன; ஒவ்வொரு கட்சியும் பல இடங்களில் கொடிக்கம்பங்களை அமைத்து வருகிறது. சில சமயங்களில், கொடிக்கம்பங்கள் அமைப்பது தொடர்பாக பிரச்சினைகள் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொடிக்கம்பங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை, அனைத்து கொடிக்கம்பங்களையும் மூன்று மாதத்தில் அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.