தினகரனுக்கு 18 எம்எல்ஏக்கள் ஆதரவு: நேரம் பார்த்து ஆப்பு வைத்த செந்தில் பாலாஜி!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (13:05 IST)
அதிமுக தற்போது தினகரனால் மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில் தினரனுக்கு தற்போது வரை 18 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கல் வந்துள்ளது.


 
 
அதிமுகவில் இருந்து தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன் தன்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என அறிவித்து தனி அணியாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.
 
தினகரனுக்கு ஆதரவாக தொடக்கத்தில் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் போன்ற இரண்டு மூன்று எம்எல்ஏக்களே இருந்தனர். ஆனால் நேற்று 11 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று 7 எம்எல்ஏக்கள் தினகரனை அவரது வீட்டில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
 
முன்னாள் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகியோர் இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சமியை தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சந்தித்த செந்தில் பாலாஜி தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
 
ஆனால் அதனை காதில் கூட வாங்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி இதனால் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜி சரியான நேரம் பார்த்து தினகரன் அணியில் சேர்ந்துள்ளார். மேலும் செந்தில் பாலாஜி ஆதரவு எம்எல்ஏக்களும் விரைவில் தினகரன் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் விபரம்:
 
1. வெற்றிவேல், 2. தங்க தமிழ்செல்வன், 3. இன்பதுரை, 4. ஏழுமலை, 5. கதிர்காமு, 6. ஜக்கையன், 7. சுப்பிரமணியன், 8. பார்த்திபன், 9. கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், 10. மோகன், 11. முத்தையா, 12. ராஜன் செல்லப்பா, 13. தங்கதுரை, 14. பாலு, 15. ஜெயந்தி, 16. செந்தில் பாலாஜி, 17. தோப்பு வெங்கடாச்சலம், 18. பழனியப்பன்.
அடுத்த கட்டுரையில்