அட்ரஸ் இல்லாமல் ரயிலில் வந்த 1556 கிலோ கெட்டுப்போன இறைச்சி! சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
திங்கள், 9 செப்டம்பர் 2024 (12:03 IST)

டெல்லியில் இருந்து சென்னை செண்ட்ரல் வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆயிரம் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி சென்னைக்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து தமிழக தலைநகரான சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெரிய அளவிலான பார்சல்கள் வந்துள்ளது. அதை வாங்க யாரும் வராத நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

 

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்த தகவலின்படி அங்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அந்த பார்சல்களில் கெட்டுப்போன இறைச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலும் ஆட்டிறைச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ALSO READ: மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகை.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த உணவு பாதுகாப்பு துறையினர், தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த இறைச்சி பார்சல்கள் தாமதமாக வந்து சேர்ந்ததால் கெட்டுப் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் அதில் அனுப்பியவர், பெறுபவர் யாருடைய முகவரியும் இல்லாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் விசாரித்ததில் பார்சலை வாங்க சனிக்கிழமையே சிலர் வந்ததாகவும், பின்னர் அவற்றை வேண்டாம் என சொல்லிவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 1500 கிலோ கெட்டுப்போன இறைச்சி என்பதால் அவற்றை அப்புறப்படுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உதவியை நாடியுள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவற்றை பாதுகாப்பாக எடுத்து சென்று அப்புறப்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்