தேசத்துரோக வழக்கில் சிறையில் உள்ள யாசின் மாலிக்கின் மனைவி, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது தொடர்பாக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக், பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் தேசத்துரோக வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் தான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாக யாசின் மாலிக் சிறைக்குள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கடிதம் எழுதிய யாசின் மாலிக்கின் மனைவி, சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு, உண்ணாவிரதம் இருந்து வரும் தனது கணவருக்கு நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா பேசும்போது “காங்கிரஸ் ஏன் எப்போதும் பயங்கரவாதிகளுடன் நிற்கிறது? பாகிஸ்தான் ஆதரவு பெற்ற யாசின் மாலிக்கிற்காக ராகுல் காந்தியிடம் யாசின் மாலிக்கின் மனைவி கோரிக்கை கடிதம் எழுதியதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை.
மாலிக் உள்ளிட்ட பல குற்றவாளிகள் விமானப்படை அதிகாரிகளை காஷ்மீரில் வைத்து கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள். இது மாநிலத்திற்கு எதிரான போருக்கு சமமாகும். ஆனால் அவரை டாக்டர் மன்மோகன் சிங் அவரது ஆலோசகராக நியமனம் செய்ததை, டெல்லி ஊடகங்கள் யூத் ஐகான் என்று அழைத்தன” என விமர்சித்துள்ளார்.
Edit by Prasanth.K