நான் பணம் தருகிறேன்… ஜெட் ஏர்வேஸைக் காப்பாற்றுங்கள் – மல்லையா டிவிட் !

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (13:40 IST)
கடன் சுமையால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க தான் தர வேண்டிய பணத்தை தருவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய்மல்லையா, கடனை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்டார். அவரை இந்தியா அழைத்து வர மத்திய அரசு சட்டரீதியாக எடுத்த முயற்சியின் அடிப்படையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என  கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவர் சார்பில் ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தொடர்ந்து இயங்க முடியாத சூழலில் இருக்கிறது. அதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகி உள்ளார். இதனால் மேலும் நெருக்கடி அதிகமாகி உள்ளது. அதையடுத்து அந்நிறுவனத்தை மீட்க பொதுத்துறை வங்கிகள் கடன் தர முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா ‘ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க பொதுத் துறை வங்கிகள் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளும், நகர இணைப்பும் உருவாகும். மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் பாதுகாக்கப்படும்.. என்னிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்’ என தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்