உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை உபி மாநிலத்திற்கு கொண்டு வரும் வழையில் திடீரென பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த பரபரப்பை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனையடுத்து போலீசார் சுட்டதில் விகாஸ்துபே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது
உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் பகுதியில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றபோது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக விகாஸ் துபே சுட்டதில் 8 போலீசார் பலியாகினர்.
உபி முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் அம்மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து விசாரணைக்காக உபி மாநிலத்திற்கு அழைத்து வரும் வழியில்தான் விகாஸ்துபே தப்பிச்செல்ல முயன்றதாகவும், இதனையடுத்து அவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது