உலக அளவில் மூன்றாவது இடமல்ல; இரண்டாவது இடம்!? – கொரோனா குறித்து மத்திய அமைச்சர்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (12:42 IST)
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதமே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பரிசோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கு அதிகமான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் “எல்லா செய்தி ஊடகங்களும் இந்தியா உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளதை தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார்கள். இதை நாம் சரியான கோணத்தில் அணுக வேண்டும். உலக அளவில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. அதன்படி பார்த்தால் 10 லட்சம் மக்களில் 538 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் இது 10 லட்சம் மக்களுக்கு 1,453 என்று உள்ளது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்திற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள சிலர் உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆனால் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா கொரோனா பாதிப்பில் 24வது இடத்தில் உள்ளது என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்