கவுன்சிலர் ஒருவரை கொல்ல வந்த கூலிப்படை ஆள் துப்பாக்கி வேலை செய்யாததால் பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கிய சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கல்கத்தாவில் உள்ள வார்டு ஒன்றின் கவுன்சிலராக இருப்பவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷாந்தா கோஷ். சமீபத்தில் இவர் தனது வீட்டிற்கு வெளியே சேரில் அமர்ந்து சிலருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவர் வேகமாக இறங்கி வந்து சுஷாந்தாவை துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். ஆனால் துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. இதனால் உடனடியாக அவர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால் சுஷாந்தாவும், பொதுமக்களும் அந்த நபரை வளைத்து பிடித்து விட்டனர். அவருடன் வந்திருந்த மற்றொரு ஆசாமி பைக்கில் தப்பித்து ஓடிவிட்டார்.
பொதுமக்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் நடத்திய விசாரணையில் இக்பால் என்ற நபர்தான் சுஷாந்தாவை கொலை செய்ய சொல்லி அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார் அந்த கூலிப்படை ஆசாமி. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் குற்ற செயலுக்கு தூண்டிய இக்பாலையும், தப்பித்து ஓடிய மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு முயற்சியின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K