சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் குற்றவாளி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளி எங்கு தப்பி சென்றார் என்பது தெரியவில்லை. குற்றவாளி குற்றவாளி இந்தியில் பேசியதாக சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், அருகில் உள்ள மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலும், சென்னை சென்ட்ரல் மற்றும் ரயில் நிலையங்களிலும் ஒவ்வொரு ரயிலிலும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, பள்ளி முடித்து வீடு திரும்பிய நான்காம் வகுப்பு மாணவியை மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், அந்த குற்றவாளியை தேடும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளி குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்றும், ஐந்து தனிப்படைகள் இரவு பகலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.