ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (11:58 IST)
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 
 
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்ததாகவும், இதற்கு கைமாறாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த பணப் பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
 
இதனை விசாரித்த நீதிபதி ஓ.பி.ஷைனி ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் எந்த ஆதாரமும் அற்றவை என்று தீர்ப்பளித்து சிபிஐ குற்றம்சாட்டியிருந்த நிறுவனங்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
 
இந்நிலையில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இந்த வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்