மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒரு பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற குற்றவாளியை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மேற்கு வங்க மாநில மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 10ஆம் தேதி, மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி, மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, "பெண் மருத்துவர்கள் இரவு வேலை செய்யக்கூடாது என கூறும் மேற்கு வங்க அரசின் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
"பெண்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை, சம வாய்ப்புகளையே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் அனைத்து நேரங்களிலும் பணிபுரிய விரும்புகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் பொறுப்பு. மேற்கு வங்க அரசு இரவு பணியைத் தவிர்க்குமாறு உத்தரவிட முடியாது," என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.