ராமாகாந்த் அர்ச்ரேக்கர் மரணம் – சச்சினை வம்பிழுக்கும் சிவசேனா

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (16:46 IST)
மறைந்த முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் ராமாகாந்த் அர்ச்ரேக்கரின் உடலுக்கு மஹாரஷ்டிரா அரசு சார்பில் அரசு மரியாதை வழங்காததற்கு சிவசேனாக் கட்சிக் கண்டனம் தெரிவித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ளி, பல்விந்தர் சிங், ரமேஷ் பவார் உள்ளிட்ட பலக் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் சிறப்பானப் பங்களிப்பை அளித்து அவர்களை உலகம் போற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்களாக மாற்றியதில் பயிற்சியாளர் ராமாகாந்த் அர்ச்ரேக்கருக்கு பெரும்பங்கு உண்டு. இவர்களைப் போலப் பல இளம் வீரர்களை இன்றும் தனது பயிற்சிப் பள்ளியின் மூலம் உருவாக்கியிருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்னர் இவர், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சச்சின் தனது குருவின் உடலை சுமந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மாணவர்கள் வழி நெடுக தங்கள் பேட்டோடு நின்று அவருக்கு வணக்கம் செலுத்தினர்.

சிறந்த வீரர்களை உருவாக்கியதற்காக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. இத்தகைய சிறப்பானப் பணிகளை செய்து, மிக உயரிய விருதுகளை வாங்கிய அவருக்கு மஹாராஷ்டிரா அரசு உரிய மரியாதை செலுத்தவில்லை என சிவசேனாக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தனது குருவிற்கு மரியாதை செலுத்தாத அரசின் விழாக்கள் எதிலும் சச்சின் இனிமேல் கலந்துகொள்ள கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்