அரியானாவின் அம்பாலாவில், ஒரு மூத்த குடிமக்கள் தம்பதியினரை சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து, மோசடிக் கும்பல் ஒன்று ரூ.1.5 கோடி வரை ஏமாற்றிய வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் சஷிபாலா சச்தேவா தம்பதியினருக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் சிபிஐ அதிகாரிகள் என நடித்து மோசடியாளர்கள் பேசினர். அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் போலியான உத்தரவு ஒன்றை காட்டி, பணமோசடி வழக்கில் தம்பதியினர் சிக்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.
இந்த மிரட்டலால், அவர்கள் 13 நாட்கள் "டிஜிட்டல் கைது" கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, நிலையான வைப்பு நிதிகளை உடைத்து ரூ.1.5 கோடி பணத்தைப் பறி கொடுத்தனர். மன அழுத்தத்தால் கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்பே, இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மோசடியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே போலியாக உருவாக்கியது நீதிபதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலி நீதிமன்ற உத்தரவுகள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சேதப்படுத்துகின்றன," என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மத்திய அரசு, சிபிஐ, அரியானா அரசு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணை குறித்த நிலை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.