800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

Prasanth K

செவ்வாய், 15 ஜூலை 2025 (13:48 IST)

ஜார்கண்டில் எலிகள் கஞ்சா தின்ற வழக்கு போல தற்போது 800 மதுப்பாட்டில்களை குடித்து காலி செய்ததாக புதிதாக கிளம்பியுள்ள தகவல் வைரலாகியுள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் புதிய மதுபானக் கொள்கை அமலுக்கு வர உள்ளது. அதன்படி, மதுபானக்கடைகளுக்கான அரசின் ஒதுக்கீடுகள் முடிவடைவதுடன், இனி ஆன்லைன் மூலமே ஒதுக்கீடுகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

 

அதற்கு முன்பாக கலால்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களில் மதுபானக்கடைகளை ஆய்வு செய்து விற்பனை மற்றும் இருப்பு குறித்த கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தன்பாத் மாவட்டத்தில் சோதனை செய்தபோது இந்திய தயாரிப்பு மதுவகைகளில் 802 பாட்டில்கள் கணக்கில் வராமல் இருந்துள்ளது.

 

இதுகுறித்து அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரித்தபோது, எலிகள் மூடியை கடித்து திறந்து மதுபானங்களை குடித்து விடுவதாகவும், அப்படியாக எலிகள் குடித்ததில் 802 மதுப்பாட்டில்கள் வீணாகி விட்டதாகவும் கூறியுள்ளனர். அந்த விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள், 802 மதுப்பாட்டில்களுக்கான தொகையை ஊழியர்களே செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

 

இந்த சம்பவம் வைரலான நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் ப்ரதுல் ஷாத்தியோ, இதெல்லாம் அரசு நடத்தும் நாடகம் என்றும், மதுப்பாட்டில்கள் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளையும், மது குடித்த எலிகளையும் கைது செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். அவர் எலிகள் என்று இதன் பிண்ணனியில் ஒளிந்துள்ள அரசியல் பிரமுகர்களைதான் விமர்சிக்கிறார் என கூறப்படுகிறது.

 

இதற்கு முன்னதாக இதே ஜார்கண்டில் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து வைத்திருந்த கஞ்சா மூட்டைகளை எலி தின்று விட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்