ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்.. இறப்பதற்கு முன் ஐடி ஊழியரின் கடைசி பதிவு..!

Siva

திங்கள், 13 அக்டோபர் 2025 (08:35 IST)
கேரளாவில் ஐ.டி. ஊழியரான ஆனந்து அஜித் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் நடப்பதாக அவர் வெளியிட்ட கடைசி பதிவு, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உயிரிழப்பதற்கு முன் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஆனந்து அஜித், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலரால் தான் மீண்டும் மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் இத்தகைய சம்பவங்கள் பரவலாக நடப்பதாகவும், தான் மட்டுமே பாதிக்கப்பட்டவர் இல்லை என்றும் எச்சரித்திருந்தார்.
 
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். "ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் கட்டுக்கடங்காமல் நடக்கிறது என்று ஆனந்து தெளிவாக கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால், மிகவும் பயங்கரமானது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
லட்சக்கணக்கான குழந்தைகள் ஆபத்தில் இருக்கலாம் என எச்சரித்த அவர், ஆர்.எஸ்.எஸ். தலைமை உடனடியாக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
கேரள காவல்துறை ஆனந்து மரணம் குறித்து விசாரணையை தொடங்கியிருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். முகாம்கள் குறித்து பரந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்