சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 வயதான பொறியாளர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னை பலாத்காரம் செய்ததாக தான் காதலித்த காதலியே குற்றம் சாட்டியதையடுத்து, மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்கட்ட விசாரணையில், நொய்டாவில் பணிபுரிந்த கௌரவ், ஒரு திருமண இணையதளம் மூலம் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவர்களின் உறவு வலுவடைந்துள்ளது. ஆனால், திடீரென அந்த பெண் அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கௌரவ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வீட்டிற்குத் திரும்பிய பிறகு, கௌரவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அவர் அக்கம் பக்கத்தினருடன் பேசுவதை நிறுத்தி, தனிமைப்படுத்தி கொண்டதாகத் தெரிகிறது. அவரது நண்பர் சந்தீப் குப்தா, "கௌரவ் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார், ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் அவரை உடைத்துவிட்டன" என்று கூறியுள்ளார். மற்றொரு நண்பர் டிப்ஸி மக்கர், "சமீப நாட்களில் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை, மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்" என்று தெரிவித்தார். இந்த நிலையில் தான் திடீரென கெளரவ் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை குறிப்பில், “காதலில் துரோகம் செய்யப்பட்டு விட்டேன்” என்று எழுதியிருப்பது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.