சர்க்கரை, உப்பிலும் கலந்துள்ள பிளாஸ்டிக்? மாரடைப்பு ஏற்படும் அபாயம்? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:52 IST)

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் பிளாஸ்டிக் துகள்கள் கலந்து விட்டதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதிலுமே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் இருந்து சுமார் 3 சதவீதம் அளவிற்கே மறுசுழற்சி செய்யப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதனால் பூமியின் பல பகுதிகள் பிளாஸ்டிக் குப்பைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. மனிதனால் கூட தொட முடியாத கடலின் ஆழமான பகுதிக்குள்ளும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பிளாஸ்டிக்கால் உலகம் அடைந்து வரும் பாதிப்பை காட்டும் உதாரணமாகும்.

 

பிளாஸ்டிக்கால் ஆபத்து மனிதனுக்கு வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல் அவனது உடலுக்குள்ளும் நிகழ்ந்து வருவதை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அதீத பிளாஸ்டிக் பயன்பாட்டால் உருவான மைக்ரோப்ளாஸ்டிக்குகள் நீர்நிலைகள், கடல்களில் தண்ணீரோடு தண்ணீராக கலந்திருப்பதை சமீபத்தில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் ரத்தத்தில் கூட மைக்ரோப்ளாஸ்டிக்குகள் கலப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியானது.

 

தற்போது நாம் தினசரி உண்ணும் சர்க்கரை, உப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸிக் லிங்க் என்ற அமைப்பு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை, உப்பில் நடத்திய ஆய்வில் அதில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

 

இதுகுறித்து எச்சரித்துள்ள டாக்ஸிக் லிங்க் அமைப்பின் இயக்குனர் ரவி அகர்வால், இவ்வாறு மைக்ரோ பிளாஸ்டிக் உப்பு மற்றும் சர்க்கரையில் 0.1 மிமி முதல் 5 மிமி அளவில் காணப்படுவதாகவும், பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் பருமன் அதிகரித்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ளக் கூடும் என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்