’ஆபரேஷன் ஈகிள்’ கஞ்சா வேட்டை.. ஐடி ஊழியர்கள் உள்பட 14 பேர் கைது..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (16:53 IST)
தெலுங்கானாவில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் ஈகிள் என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஐ.டி. ஊழியர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தெலுங்கானா மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கையின்படி, ஆபரேஷன் ஈகிள் என்ற நடவடிக்கை அதிரடியாக எடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள முக்கியப் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில், கஞ்சா வாங்க முயன்றவர்கள், விற்பனை செய்ய முயன்றவர்கள் ஆகியோர் பிடிபட்டனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஐ.டி. ஊழியர்கள் என்றும், ஒருவர் மாணவர், ஒருவர் மேனேஜராக வேலை பார்ப்பவர், ஒரு பிசினஸ்மேன், ஒருவர் ஆன்லைன் வர்த்தகர் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், கைதானவர்களில் ஒரு தம்பதி தங்களுடைய நான்கு வயது மகளுடன் கஞ்சா வாங்க வந்ததாகவும் கூறப்பட்டது. கைதான 14 நபர்களுக்கும் சோதனை செய்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போதைப் பொருள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
 
கஞ்சா விற்பனை செய்த சந்தீப் என்பவர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆபரேஷன் ஈகிள் வேட்டை தொடரும் என்றும், தெலுங்கானா முழுவதும் கஞ்சா விற்பவர்களைப் பிடிக்காமல் விடமாட்டோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்