கொல்கத்தாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், தற்போது இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர், கவுன்சிலிங் கொடுப்பதற்காக ஆண்கள் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சென்றதும் அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அவர் சுயநலவை இழந்ததாகவும் தெரிகிறது. சுயநினைவு திரும்பியதும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து, "வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த கல்லூரி மாணவி காவல்துறையில் புகார் அளித்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிகிறது. அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் கொல்கத்தாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.