குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

Mahendran
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:42 IST)
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் கேரள மாநில மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், அங்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகளுடன் ஒரு இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் வளைகுடா நாட்டிலிருந்து கேரளா திரும்பிய அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். மேலும், அவரது கைகளில் அம்மை நோயை போல் தழும்புகள் இருப்பதால், சிகிச்சைக்காக மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு குரங்கம்மை நோயின் அறிகுறிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால், அவரது உடலில் இருந்து திரவ மாதிரிகள் எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவின் அடிப்படையில், அவர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவரா என்பதற்கான விடை கிடைக்கும்.

பரிசோதனை முடிவு சில நாட்களுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுவாக நோய் கண்டறிதல் மற்றும் நோய் உறுதி செய்வதற்கான பரிசோதனை முடிவு 3 நாட்களுக்குள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்