கேரள மக்களுக்கு காண்டம் கொடுக்கலாமா? : முகநூலில் வாலிபர் சர்ச்சை பதிவு

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (08:54 IST)
மழை வெள்ளத்தால் கேரள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், முகநூலில் அநாகரீகமாகவும், கிண்டலாகவும் கருத்து தெரிவித்த நபரை ஓமன் நாட்டு நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

 
கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதாலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர்.   
 
மழையின் காரணமாக 700-க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மழையால் ஏற்பட்ட சேத மதிப்பு 20 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
கேரள மாநிலத்திற்கு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சிகள் முதல் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து பலரும் அத்தியாவசப்பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
 
மேலும், முகநூலில் கேரளவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வழங்குமாறு கோரிக்கைகள் வலுத்து வருகிறது. அதுபோல், உதவி கேட்டு கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் முகநூலில் கோரிக்கை வைத்திருந்தார். அப்போது, ஓமன் நாட்டில் பணிபுரியும் கேரளாவை சேர்ந்த ராகுல் என்பவர்  ‘மக்களுக்கு காண்டம் தேவையா?’ என மலையாள மொழியில் பதிவிட்டிருந்தார்.

 
இதை யாரும் பெரிதாக கருதவில்லை என்றாலும், அவர் பணிபுரியும் நிறுவனம் இதை சீரியஸாக எடுத்துக்கொண்டது. இதையடுத்து, உடனடியாக அவரை வேலையிருந்து நீக்கி விட்டது. ராகுல் ஓமெனில் உள்ள லுலு ஹைபர் மார்க்கெட்டில் கேஷியராக பணிபுரிந்து வந்துள்ளார். 
 
இதையடுத்து, தனது முகநூலில் மன்னிப்பு வீடியோ வெளியிட்ட ராகுல், கேரள மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்தது முட்டாள்தனமான ஒன்று. மது போதையில் இருந்ததால் அப்படி செய்து விட்டேன். இதனால் என் வேலையை இழந்து விட்டேன்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்