வேணாம் ட்ரம்ப்பே.. வேற மாதிரி ஆயிடும்!? - அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick

வியாழன், 3 ஏப்ரல் 2025 (09:17 IST)

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் மற்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைந்த வரியே விதிக்கப்படுவதாகவும், ஆனால் அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகளில் அதிக வரி விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

 

இதற்காக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்த அவர் ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிற்கு விதிக்கும் வரியே அந்நாடுகளுக்கும் விதிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, நேற்று அமலுக்கு வந்த இந்த புதிய வரி விதிப்பு முறையால் இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் அமெரிக்கா வரி விதிக்கிறது. சீனாவின் இறக்குமதிகளுக்கு 34 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது. இதற்கு உலக நாடுகள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பேசியுள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி “அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை மிகவும் தவறானது. இது மேற்கத்திய நாடுகளை பலவீனப்படுத்துவதுடன் உலகளாவிய வர்த்தக போர் ஏற்பட வழிவகுக்கும். அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி செயல்பட எங்களால் முடிந்ததை செய்வோம்” என கூறியுள்ளார்.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா “அமெரிக்கா தனது ஒருதலைப்பட்ச கட்டண நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்து, அதன் வர்த்தக பங்காளிகளுடனான வேறுபாடுகளை சமமான உரையாடல் மூலம் முறையாக தீர்க்க வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது" என கூறியுள்ளது

 

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பெனிஸ் கூறும்போது “"ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரிகளைப் பற்றி குறிப்பிட்டார். அப்படியென்றால் பரஸ்பர வரி 10% அல்ல, பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்" என்று அல்பானீஸ் கூறினார். ஏனென்றால் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. மேலும் அமெரிக்கா ஆஸ்திரேலியாவுடன் $2 முதல் $1 வரை வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது. "இது ஒரு நண்பரின் செயல் அல்ல." என்று தெரிவித்துள்ளார்.

 

நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டோட் மெக்லே பேசும்போது “நாங்கள் பழிவாங்கப் பார்க்க மாட்டோம். அது நியூசிலாந்து நுகர்வோர் மீது விலைகளை உயர்த்தும், மேலும் அது பணவீக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

 

இந்த பரஸ்பர வரிவிதிப்பை இங்கிலாந்து, இந்தியா, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்காவின் நட்புறவு நாடுகள் எதிர்க்கவில்லை. அதேசமயம் இந்த வரிவிதிப்பின் பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்