National Science Day: அறிவியலின் பாதையை மாற்றிய ராமன் விளைவு!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (09:50 IST)
உலக அளவில் பல அறிவியல் சாதனைகள் உலகத்தின் போக்கையே மாற்றியிருக்கின்றன. அவற்றில் அறிவியல் அணுகுமுறையின் போக்கிலேயே மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக ‘ராமன் விளைவை’ சொல்லலாம்.

இந்தியாவிலிருந்து அறிவியல் துறையில் உலக அளவில் சாதித்தவர்களில் முக்கியமானவர்கள் சர் சி வி ராமன், ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் என பலர் இருக்கின்றனர். ஆனால் தேசிய அறிவியல் தினம் சர் சி வி ராமனின் கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது ஏன் தெரியுமா? அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனித வாழ்க்கையில் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் இருக்கும். ஆனால் சி வி ராமனின் கண்டுபிடிப்பு அறிவியலின் பல துறைகளுக்கு உதவும் வகையில் அமைந்தது. சர் சி வி ராமன் கண்டுபிடித்த நிறமாலை விளைவு அறிவியலில் பல்வேறு ஆராய்ச்சிகளில் இன்று உதவுகிறது.

ராமன் விளைவு என்றால் என்ன?

ஒரு ஒளியானது ஒரு ஊடகத்தின் (பொருள்) வழியே புகுந்து செல்லும்போது சிதறி அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த ஒளி சிதறலானது அந்த பொருள் கொண்டுள்ள அணுக்கட்டமைப்பை பொறுத்து மாறுபடுகிறது. அவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீளமும் மாற்றமடைகிறது.

இந்த எளிய கண்டுபிடிப்பின் மூலம் அறிவியல் உலகிற்கு ஆய்வு செய்ய நல்ல வழிமுறை கிடைத்தது. தற்போது அணுக்கழிவுகளை தொலைவில் இருந்தே ஆய்வு செய்தல், லேசர் மருத்துவமுறை உள்ளிட்ட பல துறைகளில் ராமன் விளைவு முக்கிய பங்கு வகிக்கிறது.

சர் சி வி ராமன் மற்றும் அவரது குழுவினர் இந்த ஒளி மாற்ற விளைவை பிப்ரவரி 28ம் தேதி 1928ம் ஆண்டு கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பிற்காக சர் சி வி ராமனுக்கு 1930ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல் நோபல் பரிசு பெற்ற இந்தியரும், தமிழரும் சர் சி வி ராமன் தான். அவரது சாதனையை போற்றும் விதமாக அவரது கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறோம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்