இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை வரும் 2025 ஜூன் 14 வரை கட்டணமின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த இலவச சேவைக்கான காலக்கெடு வேகமாக நெருங்கி வருவதால், இதுவரை இந்த வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள் உடனடியாக செயல்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஜூன் 14ஆம் தேதிக்குப் பிறகு, ஆதார் விவரங்களை மாற்றியமைக்க ₹50 கட்டணம் செலுத்த நேரிடும்.
'மை ஆதார்' (myAadhaar) இணையதளம் மூலம் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற மக்கள் தொகை சார்ந்த தகவல்களை எந்தவிதக் கட்டணமும் இன்றிப் புதுப்பிக்க UIDAI வழிவகை செய்துள்ளது. ஆனால், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க ஆதார் சேவா கேந்திரா மையங்களுக்குச் சென்றுதான் மாற்றங்கள் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த இலவச சேவைக்கான காலக்கெடு ஏற்கனவே 2024 டிசம்பர் 14 இல் முடிவடைய இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆதார் வைத்திருப்பவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்வது அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு மிகவும் அவசியம். காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.