இந்திய சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் பங்கேற்றப்போதிலும் அதில் முக்கியமான தேசப்போராட்ட வீரராக கருதப்படுபவர் மகாத்மா காந்தி. வன்முறை துறந்து அமைதி வழியில் அவர் போராடிய விதம் உலக நாடுகளால் இன்றும் வியந்து பார்க்கப்படுவதோடு அமைதி வழி போராட்டத்தை போற்றும் வகையில் பல நாடுகளில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது உருவப்படம் இந்திய ரூபாய் நோட்டுகளில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் அதேசமயம் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டும் இருப்பதும் பல சர்ச்சைகளை பல நாட்களாக ஏற்படுத்தி வருகிறது.
நாட்டுக்கு போராடிய பிற வீரர்களின் படங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் ஒவ்வொரு சுதந்திர வீரர் படத்தை அச்சடிக்கலாம் என்ற கோரிக்கையும் உள்ளது. அந்த வகையில் தற்போது அகில இந்திய இந்து மகாசபா ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக சாவர்க்கர் படத்தை அச்சடிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தேசத்திற்காக போராடி அந்தமான் சிறையில் பல இன்னல்களை அனுபவித்த சாவர்க்கரின் தியாகம் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டுவிட்டதாக இந்து மகாசபாவினர் கூறி வருகின்றனர். ரூபாய் நோட்டில் அவரது படத்தை அச்சடிப்பதோடு மட்டுமல்லாமல் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் செல்லும் பிரதான சாலைக்கு சாவர்க்கர் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.