நாக்பூர் மேயரை 2 மர்ம நபர்கள் துப்பாக்கியால் 3 முறை சுட்ட சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் பாரதிய ஜனதா கட்சியின் மேயரான சந்தீப் ஜோஷி, கடந்த 17 ஆம் தேதி தனது 24 ஆவது திருமண நாளை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கொண்டாடினார்.
பின்பு நள்ளிரவில் அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். சுமார் 10 க்கும் மேற்பட்ட கார்களில் அவர்களது உறவினர்கள் முன்னாள் செல்ல, பின்னால் சந்தீப் ஜோஷி தனது காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.
அப்போது ஒரு மோட்டார் பைக்கில் வந்த 2 மர்ம நபர்களில், பின்னால் அமர்ந்திருந்தவர் சந்தீப் ஜோஷியின் காரை நோக்கி 3 தடவை துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒரு குண்டு டிரைவர் இருக்கை கண்ணாடியையும், இரண்டாவது குண்டு பின்புற கண்ணாடி வழியாகவும் துளைத்து வெளியே சென்றன. மூன்றாவது குண்டு காருக்கு பின்புறம் பாய்ந்தது. இதில் தடுமாறிய மேயர் உடனடியாக காரை நிறுத்தினார்.
மேயர் உயிரிழந்துவிட்டார் என நினைத்து மர்ம நபர்கள் தப்பி ஓடினர். எனினும் மேயர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். பின்பு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். பின்பு இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். முன்னதாக மேயருக்கு மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதும், சமீபத்தில் அவரது கார் திருடுபோனதாகவும் கூறப்படுவது கூறிப்பிடத்தக்கது.