ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஹனுமந்தராவ்-சசிகலா தம்பதியினர் கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகின்றனர். மென்பொறியாளராக சசிகலா பணிபுரிந்து வந்தார். ஹனுமந்த ராவும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார். இவர்களுக்கு 7 வயதில் அனிஷ் சாய் என்ற மகன் இருந்தான்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிய ஹனுமந்த ராவ், தனது மனைவியும் மகனும் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்தேகத்தின்பேரில் ஹனுமந்தராவைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த சசிகலாவின் பெற்றோர், சசிகலாவின் கணவரான ஹனுமந்த ராவ்தான் சசிகலாவைக் கொலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஹனுமந்த ராவுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் இதுதொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு இருந்துவந்ததாகவும் சசிகலாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் தாயும் மகனும் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.