மலையாள நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் இணைத்துக்கொண்டதால் எழுந்த பிரச்சனைக்காக நடிகரும், சங்க தலைவருமான மோகன்லால் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மலையாள முன்னணி நடிகையை காரில் கடத்தில் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’-விலிருந்து திலீப் நீக்கப்பட்டார். நீண்ட போராட்டங்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்கத்திற்கு நடிகர் மோகன்லால் தலைவராக பொறுப்பேற்றார். அதன் பின் பொதுக்குழுவை கூட்டிய மோகன்லால் திலீப் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அறிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்ட நடிகை உட்பட ரேவதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சங்கத்தை விட்டு விலகுவதாக கடிதமும் அனுப்பினர்.
இந்த விவகாரம் பூதாகரம் ஆகியவுடன் என் மீதான களங்கத்தை துடைத்த பின் சங்கத்தில் சேர்கிறேன் என திலீப் தெரிவித்தார். ஆனால், சங்க தலைவரான மோகன்லால் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால், மோகன்லாலுக்கு எதிராக பல நடிகர்,நடிகைகள் களம் இறங்கினர். இதனால் மலையாள நடிகர் சங்கம் இரண்டாக உடையும் நிலை ஏறபட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால் “திலீப்பை மீண்டும் சேர்ப்பது என பொதுக்குழுவில் முடிவெடுத்த போது அங்கிருந்த எந்த நடிகையும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சிலரின் ராஜினாமா கடிதங்கள் வந்துள்ளன. திலீப் இப்போது நடிகர் சங்கத்தில் இல்லை. இந்த விவகாரத்தில் நான் செய்தியாளர்களை சந்தித்து கருத்து கூறாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.