இனி 8ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ் கிடையாது - பறிக்கப்படும் மாணவர்கள் உரிமை!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (22:28 IST)
நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இனி 5ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


 

தற்போது 8ஆம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையானது நடைமுறையில் உள்ளது. நாடு விடுதலை அடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கான அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்தச் சட்டத்தின் அடிப்படையில் 6 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் சமமான மற்றும் தரமான கல்வியை அனைவருக்கும் வழங்கிட சில விதிகள் அனைவருக்கும் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் மோடி தலைமையில் பாஜக அரசு 2014இல் பதவியேற்ற பின்னர் கல்வியை ஆர்எஸ்எஸ்-சின் கொள்கைக்கு ஏற்ப மாறுதல் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்காக டி.எஸ்.சுப்பிரமணியன் என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையில் ஒரு பகுதியை மட்டுமே வெளியிட்டு அது தொடர்பாக ஆலோசனைகளை வரவேற்பதாக கூறியிருந்தது. அதன் பரிந்துரைகள் நாட்டில் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பள்ளிகளில் 10வது வரை கல்வி பயல்வதை தடை செய்யும் நோக்கிலேயே அமைந்தவை.

அதன் அடிப்படையிலேயே தற்போது மோடி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி செல்லும் மாணவர்களின் இடைநிற்றல் போன்ற பிரச்சனைகளை களையும் விதத்தில் கொண்டு வரப்பட்ட பரிந்துரைதான் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்