நான் காணாமல் போய்விட்டேனா? ‘காணவில்லை’ போஸ்டருடன் வந்து புகார் அளித்த இளைஞர்..!

Mahendran

புதன், 23 ஜூலை 2025 (11:35 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில், ஒரு இளைஞர் காணாமல் போனதாக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட நிலையில், அந்த போஸ்டருடன் காவல் நிலையத்திற்கு வந்த அந்த இளைஞன், "என்னை கேலி செய்வதற்காகவே சிலர் இப்படி செய்துள்ளனர்" என்று புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜார்கண்ட் மாநிலம் கருவா என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது இர்ஷாத். இவர் காணாமல் போனதாக குறிப்பிட்டு, இர்ஷாதின் புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுடன் கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை பார்த்து இர்ஷாத் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றினார். ஆனால், அடுத்த நாளே மீண்டும் அதே போன்ற போஸ்டர்கள் அதே இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இர்ஷாத், ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.
 
தனது புகாரில், "என்னை கேலி செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் வேண்டுமென்றே 'காணவில்லை' என்று போஸ்டர் அடித்துள்ளனர். இதனால் நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளேன். போஸ்டர் ஒட்டியவர்களை கண்டித்த எனது மனைவியும் இந்த விவகாரத்தால் கிண்டல் செய்யப்படுகிறார்" என்று இர்ஷாத் வேதனையுடன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்துக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இர்ஷாதின் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர். தனிப்பட்ட பகையின் காரணமாக இத்தகைய செயல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்